தஞ்சாவூர்: அறநிலையத் துறையில் ஊடுருவியுள்ள “கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள்” உள்நோக்கத்துடன் கோவில்களில் இருந்து ஆகம மரபை பிரிக்க முயற்சிக்கிறார்கள் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டினார்.

கும்பகோணம் ஒப்பியப்பன் கோவிலில், இந்து மக்கள் கட்சியின் சேவை அமைப்பான இந்து தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் மற்றும் திருக்குடை சமர்ப்பண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் ஆன்மிக பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் சில தகவல்கள் வெளிவருவதாக கூறிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சமூக நீதி அமைச்சர் வன்னியரசு விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு மாட்டுக்கறி சமைத்துக் கொடுப்பது குறித்து பேசியதாகவும், இதனால் பதட்டம் உருவானதாகவும் தெரிவித்தார். அந்த பேச்சை திரும்பப் பெற வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி போராட்டம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வரும் அக்.10 அன்று அறநிலையத் துறை நிர்வாகத்திற்குட்பட்ட கோவில்களில் எது ஆகமக் கோவில், எது ஆகமமற்ற கோவில் என வகைப்படுத்த குழு அமைத்து கருத்துக்கணிப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். அந்தச் சூழலில் ஆகமத்தைப் பிரிக்கும் முயற்சியை முறியடிக்க, அர்ச்சகர்கள், பூஜாரிகள், ஆகம வல்லுநர்கள் உள்ளிட்டோரை அழைத்து தங்கள் கருத்துகளை முன்வைப்போம் என்றார்.

இடைத்தேர்தல் குறித்து விமர்சித்த அவர், அரசு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், பணம் வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.