வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவித்திருந்த நாடு தழுவிய மூன்று நாள் வேலைநிறுத்தம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) உடனான நள்ளிரவு வரை நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செப்.28 முதல் 30 வரை நடைபெற இருந்த இந்த இரண்டாம் கட்ட போராட்டம், வாரத்தில் 5 நாள் வேலை, இரண்டு நாள் விடுமுறை, ஊழியர்கள்–அதிகாரிகள் இடையேயான பாரபட்சமான நடவடிக்கைகளை மாற்றுதல், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகளும், வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான யு.எப்.பி.யு. (UFBU) பிரதிநிதிகளும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடந்தது. அதன் முடிவில் இரு தரப்பும் சுமூக உடன்பாட்டை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன்பாட்டின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக வழங்கும் மாற்று வழிகளை ஆராய்ந்து முடிவெடுக்க, உடனடியாக உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடர்பான மாற்றங்கள் குறித்து அரசுடன் பேசி தீர்வு காணவும், பிற கோரிக்கைகள் குறித்த பேச்சுகளை விரைவில் முடிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இதனைத் தொடர்ந்து திட்டமிட்ட போராட்ட நடவடிக்கைகளும், 3 நாள் ஸ்டிரைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக யு.எப்.பி.யு. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்; மாத இறுதி வாரத்தில் சேவை முடங்கும் அச்சம் தவிர்க்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.





