மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் திங்கள்கிழமை மாலை சாமி தரிசனம் செய்து வழிபட்டார். நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் அவர் கோயிலுக்கு சென்றார்.
இதற்கு முன், மதுரை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.10 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்த அவர், பின்னர் சாலை மார்க்கமாக கோயிலுக்கு வந்தார்.
அவரை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அறங்காவலர்கள் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர்கள் பூர்ண கும்ப மரியாதை வழங்கினர். தொடர்ந்து அவர் மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் தரிசனம் செய்தார்.
இந்த தரிசன நிகழ்வு தினமலர் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.





