கோவை அருகே கோவில்பாளையம் போலீசார் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் மூவரை அதிகாலை நேரத்தில் கைது செய்தனர். சினிமா காட்சியை நினைவூட்டும் வகையில் நடந்த துரத்தல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை–சத்தி தேசிய நெடுஞ்சாலையில், சரவணம்பட்டி அருகே உள்ள காபி கடையிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் பாதையில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.ஐ. விக்னேஷ் மற்றும் போலீஸ் ஏட்டு வேல்முருகன் நேற்று காலை 5.45 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட கிரேட்டா கார் (KA05NG7692) நிறுத்தப்பட்டது. எஸ்.ஐ. விசாரித்துக் கொண்டிருந்த வேளையில், காரில் இருந்தவர்கள் திடீரென வேகமாக கிளம்பினர். காரின் மேற்கூரை கம்பியை பிடித்திருந்த வேல்முருகன் உடனடியாக மேலே ஏறி, கம்பியைப் பிடித்தபடி படுத்த நிலையில் பயணித்ததாக போலீசார் கூறினர்.

கார் விளாங்குறிச்சி, காளப்பட்டி, சித்ரா வழியாக கணியூர் சுங்கச்சாவடி நோக்கி சென்றபோதும் நிற்காமல் சுமார் 40 கி.மீ. தூரம் துரத்தல் தொடர்ந்தது. தகவல் அறிந்து போலீஸ் ரோந்து வாகனங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆம்புலன்ஸும் துரத்தலில் இணைந்தன. பின்னர் அவிநாசி–கோவை சாலையில் தனியார் ஹோட்டல் அருகே அந்த கார் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாரா (27), ராஜேஷ் (23), சுரேஷ் (20) என மூவர் இருப்பது தெரிய வந்தது. பெங்களூரிலிருந்து கோவை மாவட்ட கடைகளுக்கு விநியோகிக்க ரூ.3 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்காவை காரில் கடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். கார் மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.