புதுடில்லி: பாகிஸ்தானிலிருந்து உருவாகும் எந்தவொரு அச்சுறுத்தலையும் துல்லியமாகவும் விரைவாகவும் எதிர்கொள்ள இந்திய முப்படைகளும் முழுமையாகத் தயாராக உள்ளன என்று முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித்தார்.

ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் இந்தியா எப்போதும் உஷாராகவே இருப்பதாக கூறினார். எந்த சூழ்நிலையிலும் உடனடி மற்றும் துல்லியமான பதிலடி அளிக்க முப்படைகளும் தயாராக உள்ளன என்றார்.

கடந்த ஆண்டு பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை குறிப்பிட்ட அவர், திட்டமிட்ட இலக்குகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மேற்காசியாவில் இந்தியாவுக்கு பல நட்பு நாடுகள் உருவாகியுள்ளன என்றும், இந்தியாவின் இறையாண்மை நலன்களைப் பாதுகாப்பதே முதன்மை கவனம் என்றும் அவர் கூறினார்.

சீனாவுடனான எல்லை விவகாரத்தில் இரு தரப்பு படைகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு சேனல்கள் தொடர்ந்து திறந்திருக்கின்றன என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு சூழல் மேம்பட அரசும் பாதுகாப்புப் படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.