ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்.27 மாலை 6 மணியளவில், ஆழ்துளைக் கிணற்றருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமி தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து இரவு 7.45 மணிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் சென்றதாகவும், அவர்கள் இரவு 9.05 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மாநில மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேர முயற்சிக்குப் பிறகு, செப்.28 அதிகாலை 3.50 மணியளவில் சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை அளிக்கும் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





