சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் அவர் கூறுகையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மெய்நிகர் வரிசை (Virtual Queue) முறையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும், இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் போலீஸ் அதிகாரிகளுடன் கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள் எனவும் கூறினார். பக்தர்களிடம் நட்புடன் அணுகுமாறு கேரள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவசர தேவைகளை சமாளிக்க விரைவு அதிரடிப்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் சேவைகள் உறுதி செய்யப்படும்; முக்கிய வழித்தடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்றார். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நிலக்கல்–ஜக்குபள்ளம் பகுதியில் ஒரே நேரத்தில் 400 முதல் 500 வாகனங்கள் வரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.
சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். மேலும் சன்னிதானம் மற்றும் பம்பையில் உள்ள கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் விவரங்கள் போலீசார் மூலம் சரிபார்க்கப்படும்; பம்பை ஆற்றில் துணிகளை விட்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.





