செப்.28 (திங்கள்) முதல்வர் விஜய் மதுரை வருகையை முன்னிட்டு நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அட்டவணைப்படி காலை 11 மணிக்கு அவர் மதுரை வந்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ரூ.10 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் விமான நிலையம் சென்று சென்னை புறப்படுகிறார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் விமான நிலையத்தில் பல அடுக்குச் சோதனைகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) மற்றும் போலீசார் இணைந்து வாகனங்களை தீவிரமாக பரிசோதித்த பின்பே அனுமதி வழங்குவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மோப்ப நாய்கள் மூலம் விமான நிலைய வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டதுடன், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டேலா நகர், அவனியாபுரம், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் மற்றும் தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை சாலையின் இருபுறமும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாக காந்தி மியூசியம், சுற்றுலா மாளிகை மற்றும் கோயிலுக்குச் செல்லும் திட்டமிட்ட பாதைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.