ஜலந்தர்: பஞ்சாப் கபூர்த்தலா மாவட்டம் பக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலையில், மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மனமுடைந்து தற்கொலை செய்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலால் பதற்றம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் பல்கலை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போராட்டம், நேரம் செல்ல செல்ல தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.

சில மாணவர்கள் வளாகத்திற்குள் ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். மேலும் வளாகத்தில் மாதிரிக்காக வைக்கப்பட்டிருந்த ‘மிக்’ ரக போர் விமானம் மற்றும் பீரங்கி போன்ற ராணுவ காட்சிப் பொருட்கள் மீது ஏறி கோஷமிட்டனர்.

ஒரு கட்டத்தில் பல்கலை கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாகவும் தகவல் வெளியாகி, வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஜலந்தர்–பக்வாரா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்; இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் வெறும் வதந்தி என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.