பள்ளி, கல்லூரி, கட்டுமானம், தளவாடம் உள்ளிட்ட துறைகளில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரிபோஸ் எனர்ஜி நிறுவனம் ‘மினி டீசல் பங்க்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்திலேயே எரிபொருள் கிடைப்பதால் நடைமுறை சிரமங்கள் குறையும் என வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வசதி திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் 44வது மாநில பொதுக்குழு மற்றும் 7வது மாநில மாநாட்டை ஒட்டி நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. பெட்ரோலிய தயாரிப்புகள், புதிய வகை ஆயில்கள், நவீன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்ற நிலையில், ரிபோஸ் எனர்ஜியின் ஸ்டால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் அபராஜித் சுப்பிரமணியன் கூறுகையில், எரிபொருள் மேலாண்மையே நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்றும், வாடிக்கையாளர்களின் வளாகத்திற்கே டீசலை கொண்டு சென்று வழங்கும் முறையில் இது செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். இந்த ‘மினி டீசல் பங்க்’ குறைந்தபட்சமாக 2,000 லிட்டர் வரை டீசல் கையிருப்புடன் இயங்கும் எனவும் கூறினார்.
வாகன எண்கள் மற்றும் தேவையான டீசல் அளவை இயந்திரத்தில் பதிவு செய்து, உரிமையாளர் அல்லது கட்டுப்பாட்டாளர் சாப்ட்வேர் மூலம் அனுமதி அளித்த பிறகே டீசல் நிரப்ப முடியும். மேலும் கையிருப்பு நிலவரம் உடனுக்குடன் சாப்ட்வேர் மூலம் தெரிவிக்கப்படும்; கையிருப்பு குறையும்போது தகவல் அளித்தால், சம்பந்தப்பட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் நேரடியாக அந்த இடத்துக்கு வந்து நிரப்பி விட்டு செல்வார்கள்.
இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி எரிபொருளுக்காக வாகனங்கள் அலைய வேண்டியதில்லை என்றும், உரிமையாளரின் நேரடி கட்டுப்பாட்டில் நிரப்பு நடைபெறுவதால் திருட்டு வாய்ப்பு குறையும் என்றும் அவர் கூறினார். குறைந்தபட்சம் 10 வாகனங்கள் வைத்திருப்பவர்களின் இடத்தில் இந்த அமைப்பை நிறுவ முடியும்; சொந்தமாகவும் வாடகைக்கும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.




