புதுடில்லி

நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழி கட்டாயம் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ மும்மொழி கொள்கை அமலாக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நடப்பு ஆண்டிலேயே 6ம் வகுப்பில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வாதிட்டார். நாடு முழுவதும் உள்ள 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 1.2% பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் அமலாக்கத்துக்கு தயாராக உள்ளன என்றும், மாணவர்கள் மொழித் தேர்வுகளை ஏற்கனவே செய்துவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, 7, 8, 9ம் வகுப்புகளில் 3வது மொழியைப் படிக்கும் மாணவர்கள் 10ம் வகுப்புக்கு செல்லும் போது அந்த மொழிக்காக சிபிஎஸ்இ போர்டு தேர்வு எழுத வேண்டியதில்லை; பள்ளி மட்டத்திலேயே மதிப்பீடு செய்யப்படும்; தேர்ச்சி/தோல்வி என முடிவு இருக்காது என கூறினார்.

இதையடுத்து அமர்வு, மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதே நீதிமன்றத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டது. 7ம் வகுப்புக்கு வழங்கப்பட்டதைப் போலவே 6ம் வகுப்புக்கும் நடப்பாண்டில் விலக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் 3வது மொழி மதிப்பீட்டில் தேர்ச்சி/தோல்வி எனக் குறிக்காமல், சான்றிதழில் ‘தேர்வில் பங்கேற்றார்’ என்பதையே குறிப்பிட வேண்டும் என தெரிவித்தது.