ரூ.2,000க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளில் எம்.டி.ஆர் (Merchant Discount Rate) கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவை இடைக்காலமாகத் தடுக்க சுப்ரீம்கோர்ட் திங்கள்கிழமை மறுத்தது.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) யுபிஐ மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டண விவரங்களை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும்; பரிவர்த்தனை ரூ.75,000 அல்லது அதற்கு மேல் இருந்தாலும் கட்டணம் ரூ.300 என்ற வரம்புக்குள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரே கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை வணிகத்துடன் தொடர்புடைய யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் அஞ்சன் தத்தா பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கடராமன், பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணம் வணிகர்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இடைக்காலத் தடை வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இது சட்டத்தை விட தொழில்நுட்ப அம்சங்கள் அதிகம் கொண்ட விவகாரம் போல இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்சிபிஐ ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.





