தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ஜூன் 22 முதல் பிறப்புகளுக்கு பொருந்தும் வகையில் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

“தாய்மாமன் தங்க மோதிரம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த முயற்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியை தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளதுடன், அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு சுமார் 4.11 லட்சம் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ், ஜூன் 22 முதல் நேற்று வரை பிறந்த சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மோதிரங்கள் வழங்குவதற்காக இரண்டு தனியார் நகைக்கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தகுதி பெறும் குழந்தைகளின் பெற்றோருக்கு மக்கள் நல்வாழ்வு துறை மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் காலை 11 மணிக்கு தொடக்க விழா நடந்ததும், மாநிலம் முழுவதும் 102 மையங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர். அதே நிகழ்ச்சியில் ரூ.10 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் முதல்வர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ள நிலையில், அவரது வருகையையொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.