நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் பணிகளுக்காக மத்திய அரசின் நிதி உதவியை பெற தமிழக அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மழை வெள்ளம், சுனாமி போன்றவையே முக்கிய பேரிடர்களாக பார்க்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் திருவண்ணாமலையில் எதிர்பாராத வகையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த தகவல்களை பேரிடர் மேலாண்மை ஆணையம் திரட்டி வருகிறது.
அதிக மலைப்பகுதிகள் உள்ள நீலகிரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஒரு தொடர்ச்சியான பிரச்னையாகி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதால், மலைச்சரிவுகளில் ‘ரீடெய்னிங் வால்’ எனப்படும் தடுப்பு சுவர் அமைப்பது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் தேவையான அனைத்து இடங்களிலும் தடுப்பு சுவர் அமைத்தல், அதிக சாய்வு உள்ள பகுதிகளை அடையாளப்படுத்தல், மிகச் சாய்வான இடங்களில் கட்டுமான திட்டங்களை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படும் என அரசு தரப்பு கூறுகிறது.
வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் நிலச்சரிவு தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு ரூ.750 கோடி ஒதுக்கப்படுவதாகவும், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அந்த நிதியை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதன் அடிப்படையில், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதி சாலைகளில் தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான நிதி பெறும் முயற்சிகள் முதற்கட்டமாக தொடங்கியுள்ளன என்றார்.





