புதுடில்லி: மாதாந்திர ப்ரீபெய்டு ரீசார்ஜ் பேக்குகளின் செல்லுபடியாகும் காலத்தை 28 நாட்களிலிருந்து 30 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இவை டிராய் வெளியிட்டுள்ள “தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13வது திருத்தம்) விதிமுறைகள், 2026”ன் கீழ் வருகிறது. ப்ரீபெய்டு பயனர்களுக்கு கூடுதல் ரீசார்ஜ் தேர்வுகள் மற்றும் மேம்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு வழங்குவதே நோக்கம் என டிராய் தெரிவித்துள்ளது.
புதிய வழிகாட்டுதலின்படி, பல்வேறு பேக்குகளில் இருந்த 28 நாள் செல்லுபடியாகும் காலத்திற்கு மாற்றாக 30 நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலாவதியுடன் பேக்குகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை குறைந்து, 12 முறை போதுமானதாகும் என கூறப்படுகிறது.
மேலும், இணையம் தேவையில்லாத மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் பயனர்களை கருத்தில் கொண்டு, டேட்டா இல்லாமல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் வழங்கும் சிறப்பு பேக்குகளை வழங்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் தானாக புதுப்பிக்கும் சிறப்பு கட்டண வவுச்சர்கள், குறைந்த காலாவதி கொண்ட அதிகளவிலான பேக்குகள், மற்றும் இன்டர்நெட் தேவையில்லாதவர்களுக்கான குறைந்த கட்டண எஸ்எம்எஸ் பிளான்களும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராய் அறிவிப்பை பாஜ ராஜ்ய சபா எம்பி ராகவ் சத்தா வரவேற்றுள்ளார். கடந்த மார்ச் 11-ம் தேதி பார்லிமென்டில் இந்த விவகாரத்தை அவர் எழுப்பியதாகவும், 28 நாள் திட்டங்கள் காரணமாக பயனர்கள் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும், டேட்டா தேவையில்லாதவர்களுக்கான குறைந்த விலை திட்டங்கள் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





