சென்னை: மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவில்தான் தற்போதைய ஆட்சி நடைபெறுகிறது என்றும், அதனால் “தி.மு.க. போட்ட பிச்சையில்” அரசு நடக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், அ.தி.மு.க.வை இரண்டாகப் பிளந்து சிலருக்கு சலுகைகள் வழங்கி எம்.எல்.ஏ.க்களை இழுத்ததால் இடைத்தேர்தல் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மாற்றம் வேண்டும் என ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்ததாக கூறிய உதயநிதி, கட்சி மாறி மீண்டும் ஓட்டு கேட்க வரும் ஆளுங்கட்சி வேட்பாளர்களை மக்கள் எதிர்க்கின்றனர் என்றும் தெரிவித்தார். மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பேசிய உரையில் பலமுறை தி.மு.க. குறித்து பேசினார் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக சென்றதே 41 பேர் உயிரிழக்க காரணமானதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். அமைச்சரவையை பல்வேறு பெயர்களால் கிண்டல் செய்த அவர், கடந்த ஐந்து மாதங்களில் 500 கொலைகள் நடந்ததாகவும், சென்னை வண்டலூரில் பள்ளி மாணவிக்கு வன்கொடுமை நடந்ததாகவும் கூறி, சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.




