புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவிதத் தாமதமும் ஏற்படக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை இந்தியாவுக்கு விரைவாகக் கொண்டு வர உதவும் புதிய இணையதளத்தை டில்லியில் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த இணையதளம் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகளைத் தாயகத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் உதவும் என்று அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் மாநிலப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் ஒரு குற்றவாளி பிடிபடும் சூழலில், நீதிமன்ற அனுமதி பெற்று அவசர ஒப்படைப்பு கோரிக்கைகளை அனுப்பும் பணிகள் எளிதாகும் எனவும் குறிப்பிட்டார்.

2019 முதல் 2026 வரை 36 நாடுகளில் இருந்து 288 தப்பியோடிய குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் அமித்ஷா கூறினார். வெளிநாடுகளுக்குத் தப்பியோடியவர்களை மீட்டுக் கொண்டு வர மத்திய முகமைகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற மாநில காவல்துறைகள் தனிக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தாமதம் இருக்கக் கூடாது என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.