தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சிவன்–ராமர் பக்தி குறித்து கூறிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. டில்லியில் நடைபெற்ற ஊடக அமைப்பின் மாநாட்டில் அவர் பேசியபோது, மத நம்பிக்கையை சமூக மற்றும் பிராந்திய அடையாளங்களுடன் இணைத்து பேசினார்.
அந்நிகழ்வில், தென் இந்தியாவில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருப்பதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஏன் இல்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, “நாங்கள் திராவிடர்கள், சிவபக்தர்கள்” என்றும், வடக்கில் உள்ளவர்கள் “ஆரியர்கள், ராம பக்தர்கள்” என்றும் கூறினார்.
மேலும், “பாஜ ராமரை திருடிவிட்டது” என கூறி, இது உணர்ச்சிகரமான மனநிலை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி ஏன் “ஹர ஹர மஹாதேவ்” என்று சொல்லவில்லை என்றும், பாஜவினர் மேடையில் “ஹர ஹர மஹாதேவ்” என்று கூறியதுண்டா என்றும் கேள்வி எழுப்பி, அவர்கள் எப்போதும் “ஜெய் ஸ்ரீராம்” என்றே சொல்வதாக விமர்சித்தார்.
“நாங்கள் ‘ஹர ஹர மஹாதேவ்’ என்று சொன்னால் அது அவர்களுக்கு பிடிப்பதில்லை” என கூறிய அவர், “சிவன் ஏழைகளின் கடவுள்; ராமர் பணக்காரர்களின் கடவுள்” என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய இணை அமைச்சர் சஞ்சய் குமார் பண்டி, எக்ஸ் பதிவில், ரேவந்த் ரெட்டி முன்பு காங்கிரஸ்–முஸ்லிம் தொடர்பாக கூறிய கருத்துகளை நினைவூட்டி, இப்போது ராமர் மற்றும் சிவன் போன்ற கடவுள்களுக்கு இடையே அரசியல் எல்லைகள் பற்றி பேசுவதாக விமர்சித்தார்.





