தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணமாகக் காட்டி, ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதைத் தடுக்க கோரிய மனு தொடர்பான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் எடுத்துக்கொண்டது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ. நிர்வாகியுமான கே. வெங்கடாஜலபதி, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு முன், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு ஜூலை 10 வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில், முதல்வர் தரப்பு வக்கீல், தேர்தல் வழக்குகள் முடியும் வரை தொகுதிகளை காலியாக வைத்திருப்பது பொது நலனுக்கு எதிரானது என்றும், இது பொதுநல வழக்கு அல்ல; தனிநபர் நலன் சார்ந்த வழக்கு என்றும் வாதிட்டார்.

முதல்வர் தரப்பு வாதங்கள் நிறைவடையாததால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.