சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் போது மாணவர்களின் கற்றல் திறன், புதிய மொழி கற்பதில் உள்ள சவால்கள் மற்றும் கல்விச் சுமை ஆகியவற்றை மத்திய அரசும் சி.பி.எஸ்.இ.யும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயம் என்றும், கடந்த ஜூலை 1 முதல் அது அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு மும்மொழி கட்டாயம் என்பதற்கு எதிராக மாணவர்–பெற்றோர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொள்கையை உடனடியாக திணிக்காமல் படிப்படியாக அமல்படுத்துவது மாணவர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், 7ம் வகுப்புக்கு உடனடி கட்டாய அமலிலிருந்து ஏற்கனவே விலக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதே அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





