மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று மாலை முதல்வர் விஜய் வருகை தந்து தரிசனம் செய்தார். கோயிலில் வழிபடுவதற்கு முன், “ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளது” என விண்ணப்பத்தில் எழுதி கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மதுரைக்கு அவர் வந்தது இதுவே முதல் முறை. அதற்கு முன், “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத் தொடக்க விழாவிலும், சீரமைக்கப்பட்ட காந்தி மியூசியம் திறப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

மாலை 4.15 மணியளவில் கோயிலுக்கு வந்த அவர், சித்திரை வீதி வழியாக அம்மன் சன்னிதி வாசலில் இறங்கி, இருபுறமும் நின்றிருந்தவர்களை பார்த்து கையசைத்து நடந்தார். அஷ்டசக்தி மண்டபத்தில் சிவாச்சாரியர்கள் பூரணகும்ப மரியாதை அளித்தனர். அமைச்சர் ரமேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி உள்ளிட்டோர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

கோயில் யானை பார்வதிக்கு பழங்கள் கொடுத்த பின்னர், அம்மன் சன்னிதியில் அர்த்த மண்டபம் முன் அமர்ந்து தரிசனம் செய்தார். தீபாராதனைக்குப் பிறகு வழங்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் பூசிக்கொண்டார். தொடர்ந்து முக்குறுணி விநாயகர் சன்னிதி மற்றும் சுவாமி சன்னிதியிலும் வழிபட்டார்.

“பக்தர்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது” என அவர் முன்பே அறிவுறுத்தியிருந்ததால், வழக்கமான வரிசையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தங்கக் கொடிமரத்தை தரிசித்த பின், கோயில் சார்பில் வழங்கப்பட்ட தேங்காய், பழங்களை பெற்றுக்கொண்டார். அமைச்சர் ரமேஷ் மீனாட்சி சிலையை பரிசளித்தார்; அறங்காவலர்கள் சார்பில் மீனாட்சி படம் மற்றும் பட்டு வஸ்திரமும் வழங்கப்பட்டது. மாலை 5.15 மணியளவில் கோயிலில் இருந்து புறப்பட்ட அவர், மாலை 6 மணியளவில் சென்னை நோக்கி சென்றார்.