மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை முன்னிட்டு, தி.மு.க. மகளிரணி வீடுவீடாக சென்று ‘திண்ணை பிரசாரம்’ மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழி உத்தரவிட்டுள்ளார்.
இரு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த பிரசாரத் திட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தாராபுரத்தில் தி.மு.க. திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கனிமொழி, மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என கூறினார்.
மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்ததன்படி, தற்போதைய ஆட்சியில் கடந்த நான்கு மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் மீது 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறி, அந்த விவரங்களை பெண் வாக்காளர்களிடம் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ அமைத்த பின்னும் குற்றங்கள் தொடர்வதை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும், மின்வெட்டு ஏற்படும் பகுதிகளில் திண்ணை பிரசாரம் செய்து ‘தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டதா’ என மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் கனிமொழி கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.





