மஹாராஷ்டிராவில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவரது மாமனார் மற்றும் தயாரிப்பாளர் வாசு பாக்னானி, மேலும் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ உள்ளிட்டவர்களுடன் தொடர்புடைய 12 இடங்களில் மும்பை வருமான வரித் துறையினர் திங்கட்கிழமை சோதனை நடத்தியதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரைப்பட தயாரிப்பு, படப்பிடிப்பு, வெளிநாட்டு வினியோகம் போன்ற பணிகள் பெயரில் பெருமளவில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதோடு, வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள் மற்றும் திரைப்பட ஸ்டுடியோ உள்ளிட்ட இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, அயலான், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் வாசு பாக்னானியின் மகன் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்துள்ளார்; வாசு பாக்னானி மற்றும் ஜாக்கி ‘பூஜா என்டெர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் திரைப்படத் துறையுடன் தொடர்புடைய வணிகங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், 2021–22 காலகட்டத்தில் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கு மற்றும் பண மோசடி விசாரணை தொடர்பாக அமலாக்கத் துறை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன் அனுப்பி வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாகவும், கடந்தாண்டு இறுதியில் அவரது சகோதரர் அமன் மீது மும்பை போதைப் பொருள் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததாகவும் செய்தி குறிப்பிடுகிறது.

சோதனை நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படும் நிலையில், சோதனை விவரங்கள் அல்லது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித் துறை தரப்பில் உடனடி அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.