மும்பையில் 122 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற இரானி கபே கியானி & கோ மீது, கடுமையான சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதன் உணவு பாதுகாப்பு உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக உள்ள துக்காராம் முண்டே உத்தரவின் பேரில், பண்டிகைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் செப்டம்பர் 23 முதல் 27 வரை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவுப் பாதுகாப்புத் துறை கூறுகையில், கபேயின் சமையலறை மற்றும் உணவு சேமிப்பு பகுதிகளில் ஈக்கள், இறந்த கரப்பான் பூச்சிகள், எலி புழுக்கைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. மேலும், வளாகத்தில் பூனைகள் இருப்பதும் பதிவாகியுள்ளது.
நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு உடனடி ஆபத்து ஏற்படும் வகையில் சுகாதார சூழல் மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டு, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அங்கு உணவு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மும்பையில் ராயல் சீனா உணவகம் உள்ளிட்ட மொத்தம் 30 உணவு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





