மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி போஸ்டர், பிளக்ஸ் பேனர் எதுவும் இல்லாமல் நடத்தப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை தொடங்கி வைத்ததாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மதுரையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். தேர்தல் பிரசார காலத்திலேயே முதல்வரை மதுரைக்கு அழைத்து வர முயற்சி செய்ததாகவும், அப்போது மாநாடு நகர புறநகர் பகுதியில் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் எங்கும் பேனர் இல்லை என்றும், மதுரை விமான நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை 16 கி.மீ. தூரம் முதல்வர் வந்த வழியிலும் போஸ்டர், பேனர் எதுவும் வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மதுரை மாவட்டத்தில் 8 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் இருப்பதையும் அவர் நினைவூட்டினார்.

முன்னதாக மக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறிய அமைச்சர், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.