தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ‘மெட்டா என்டர்பிரைஸ்’ என்ற புதிய நிறுவனத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

வெளியிட்ட அறிக்கையில், “சூப்பர் இன்டெலிஜென்ஸ்” மக்கள் மற்றும் வணிகங்களுக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். மெட்டா கோடிக்கணக்கான மக்களுக்கு உதவுகிறது என்றும், வாடிக்கையாளர்களை சென்றடைய பல வணிகர்கள் மெட்டா தளங்களின் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஏஐ பயன்பாட்டின் மூலம் தொழில் நிறுவனங்கள் வளர உதவுவதற்காகவே இந்த புதிய முயற்சி தொடங்கப்படுவதாகவும், அதற்கென தனிப்பட்ட அமைப்பாக ‘மெட்டா என்டர்பிரைஸ்’ செயல்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சித்ரஞ்சன் தேசாய் நியமிக்கப்படுவதாகவும், அவர் நேரடியாக தன்னிடம் பணியாற்றுவார் என்றும் ஜூக்கர்பர்க் தெரிவித்தார்.

தேசாய்க்கு ஏஐ, உள்கட்டமைப்பு, வணிக செயலிகள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் அனுபவம் உள்ளதாக கூறப்பட்டது. அவர் தற்போது மோங்கோடிபி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவராக உள்ளார்; இதற்கு முன் கிளவுட்பேரில் தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவை வழிநடத்தியதுடன், சர்வீஸ்நவ் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றி தலைவராகவும் இருந்துள்ளார்.