புதுடில்லி: பான் மசாலா, குட்கா போன்ற ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களை மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.

என்டிடிவி நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் நடிகன்/நடிகை; அதனால் விளம்பரத்தில் நடித்தேன், எனக்கு பொறுப்பு இல்லை” என்று யாரும் நினைக்கக் கூடாது என்றார். தயாரிப்பாளருக்கு மட்டுமே பொறுப்பு என்று கூறுவது சரியல்ல; விளம்பரத்தில் தோன்றும் பிரபலங்களும் சட்டபூர்வமாகவும் தார்மீக ரீதியாகவும் பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பான் அல்லது குட்காவை விளம்பரப்படுத்துகிறவர்கள் முதலில் தாங்களே அதை உட்கொண்டு, தங்கள் குழந்தைகளும் அதை உட்கொள்ளட்டும்; அதன் பிறகே மற்றவர்களிடம் அதைச் செய்யச் சொல்ல வேண்டும் என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு “சிஸ்டம்” மட்டுமே காரணம் என்று குறை கூறுவதால் மாற்றம் வராது; நாமும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் இதய நோய், புற்றுநோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் எனவும், சட்டத்தை நிலைநாட்டுவதிலும் ஊழலுக்கு எதிராகவும் தாம் சமரசம் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், பான் மற்றும் குட்கா விளம்பரங்களில் நடித்ததாக நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ்களை துக்காராம் அனுப்பியதாகவும், இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தி சமூக வலைதள பதிவுகளை நீக்குமாறு உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.