தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பலருக்கும் துரோகம் செய்ததன் விளைவாகவே அதிமுக சிதைந்து வருவதாக அவர் கூறினார்.
தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை குறிப்பிட்டு, அந்த முடிவு தன் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் சாதகமாக முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். “நல்லவேளை நீக்கினார்; இன்று நான் அமைச்சராகி விட்டேன். தப்பினேன் சாமி,” என அவர் பேசினார்.
மேலும், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தன்னை “தூக்கிப் பிடித்து” அமைச்சராக்கியதாக கூறிய செங்கோட்டையன், நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இயக்கம்தான் தமிழக வெற்றி கழகம் எனவும் தெரிவித்தார். ஆதரவாளர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அடக்க முயல்வோருக்கு எதிராக நிற்போம் என்றும் அவர் கூறினார்.
அதே கூட்டத்தில், அடுத்த ஆண்டிற்குள் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், அனைவருக்கும் இடம் மற்றும் ரூ.5 லட்சத்தில் வீடு வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் “வரலாறு படைக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.





