திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, திமுக பகுதி செயலர் ராம்குமார் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்ததாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
ராம்குமார் தாக்கல் செய்த மனுவில், குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தை புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் இருந்து ரூ.2 கோடியே 90 லட்சம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்தார். ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் கள ஆய்வு செய்த பின்னரே பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
மேலும் அரசியல் உள்நோக்கில் வழக்கு பதியப்பட்டதாக கூறி, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரினார். நீதிபதி ஆர். விஜயகுமார் மனுவை விசாரித்தார்.
ஆனால் மனுதாரர் தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதால், நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். போலீசார் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின், அதற்கு எதிராக மனுதாரர் உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.





