தமிழ்நாட்டில் செப் 30 அன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட இருந்த தனியார் பேருந்துகளின் ஒரு நாள் வேலைநிறுத்தம், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கடந்த எட்டு ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால் தொழில் கடும் அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் மகளிர் இலவசப் பயண அறிவிப்பு உள்ளிட்ட காரணங்களால் தனியார் பேருந்து சேவை முடங்கும் நிலை உருவாகும் எனவும் கூறியது.

இதையடுத்து கட்டண உயர்வை வலியுறுத்தி செப் 30 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என கூட்டமைப்பின் தலைவர் கே. தங்கராஜ் அறிவித்திருந்தார். ஆனால் அரசின் உறுதியைத் தொடர்ந்து அந்த முடிவு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செப் 29 அன்று வெளியிட்ட அறிக்கையில், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடர்பு கொண்டு முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததாக தங்கராஜ் தெரிவித்தார். மேலும் தங்களின் கோரிக்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்ற ஊடகங்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.