சாலை போக்குவரத்து விதிமீறல்களுக்கு மின்னணு முறையில் இ-சலான் வழங்குவது மட்டும் போதாது; அபராதத் தொகையை கறாராக வசூலிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே.வி. விஸ்வநாதன் அமர்வில் நடந்த விசாரணையில், நாடு முழுதும் வசூலாகாமல் தேங்கி உள்ள இ-சலான் அபராதத் தொகை சுமார் ரூ.20,000 கோடி என அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து போலீசார் லட்சக்கணக்கில் இ-சலான்களை வழங்கினாலும், அவற்றின் அபராதத் தொகையை உண்மையில் வசூலிப்பதே முக்கிய சவால் என்று அமர்வு குறிப்பிட்டது. பலர் அபராதத்தை உடனடியாக செலுத்துவதில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கான ஒரு தீர்வாக, செலுத்தப்படாத போக்குவரத்து அபராதத்தை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் வீட்டு மின் கட்டணத்துடன் சேர்க்கலாம் என்று நீதிமன்றம் யோசனை தெரிவித்தது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அச்சம் அபராதத்தை விரைவாக செலுத்த வைக்கும் என்பதால், இந்த முன்மொழிவை மத்திய-மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.