திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ சின்னத்தை எந்தப் பிரிவு பயன்படுத்த உரிமை பெற்றது என்பதை நான்கு மாதங்களுக்குள் இறுதியாக முடிவு செய்யுமாறு இந்திய தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான திரிணமுல் காங்கிரஸில் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 60 எம்.எல்.ஏ.க்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
“உண்மையான திரிணமுல் காங்கிரஸ் நாங்களே” என இரு தரப்பும் உரிமை கோரிய நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை ‘அனைத்திந்திய திரிணமுல் காங்கிரஸ்’ என்ற பெயரையும், கட்சியின் அதிகாரப்பூர்வ இரட்டை பூக்கள் சின்னத்தையும் இரு தரப்பும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் கமிஷன் இடைக்கால முடக்கம் விதித்திருந்தது.
இந்த இடைக்கால முடக்க உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணையில், இரு தரப்பும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் அந்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் தேர்தல் கமிஷன் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கெடு விதித்தார்.





