சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க. வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, அக்கட்சி தனது பிரசாரத் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இருவரும் த.வெ.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
ஐந்து முனை போட்டி நிலவும் சூழலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பினும், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெல்லும் இலக்குடன் த.வெ.க. தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அ.தி.மு.க.வில் வென்று பின்னர் ராஜினாமா செய்து த.வெ.க.வில் போட்டியிடுவதால், வேட்பாளர்கள் மீது தொகுதி மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், பிரசாரத்திற்கு செல்லும் போது எதிர்ப்பு எழுவதால் சில இடங்களில் பிரசாரம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சி வட்டார தகவலின்படி, முதல்வர் விஜய் பிரசாரம் செய்த பின்னர் மதுராந்தகத்தில் த.வெ.க. ஆதரவு உயர்ந்தாலும், வேட்பாளர்கள் மீதான அதிருப்தி நீடிக்கிறது. பிரசாரம் முடிவடைய ஆறு நாட்களே உள்ள நிலையில், தனியாக பிரசாரத்திற்கு செல்லாமல் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் வேட்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்; எதிர்ப்பு அதிகமுள்ள பகுதிகளை தவிர்க்க வேண்டும் என தலைமையால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





