மதுரை அரசு மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிர’ திட்டத்தை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார்களை சந்தித்து வாழ்த்திய அவர், அங்கு இருந்த 10 குழந்தைகளுக்கு நேரடியாக மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து ஆடிட்டோரியத்தில் இருந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

மும்மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முதல் மூன்று மோதிரங்கள் வழங்கப்பட்டன. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களைச் சேர்ந்த அர்ச்சனா தேவி, ரபீலா பீவி, ஸ்டெல்லா மேரி ஆகியோரின் குழந்தைகளுக்கு முதலில் மோதிரம் அணிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு குழந்தைக்கு மோதிரம் அணிவிக்கும் போது பால் வாயிலிருந்து வழிந்ததை பார்த்த முதல்வர், அருகிலிருந்தவர்களிடம் டிஸ்யூ வாங்கி தாயின் கையில் கொடுத்து துடைக்கச் சொன்னார். மேலும் சில குழந்தைகளை தூக்கி கொஞ்சி நெற்றியில் முத்தமிட்டார்; புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்; சிலர் கேட்டபோது குழந்தைகளின் ஆடையில் கையெழுத்திட்டார். இரண்டு தாய்மார்கள் கேட்டதால், முன்பே தேர்வு செய்த பெயர்களை குழந்தைகளின் காதில் சொல்லி பெயர்சூட்டியதாகவும் கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் தாரேஷ் அகமது வரவேற்றார்; தலைமை செயலாளர் சாய்குமார் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், விஸ்வநாதன், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.