பெங்களூருவில் படிக்கட்டில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து காயமடைந்த ஒருவருக்கு, தினமலர் ஆண்டு சந்தாவுடன் இணைக்கப்பட்ட காப்பீடு மூலம் நிதியுதவி கிடைத்துள்ளது.
முருகேஷ்பாளையா நஞ்சாரெட்டி காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் (63) அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். செப்டம்பர் 13 காலை வீட்டின் இரண்டாம் தளத்திலிருந்து இறங்கும்போது கால் தவறி விழுந்ததாகவும், கடும் வலியுடன் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மகன் மற்றும் நண்பர்கள் அவரை ஹொஸ்மெட் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். எக்ஸ்ரே பரிசோதனையில் முட்டிக்குக் கீழ் எலும்பு முறிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மறுநாள் அறுவை சிகிச்சை செய்து ஸ்டீல் ராடு பொருத்தப்பட்டதாகவும், சிகிச்சை செலவு சுமார் ரூ.2.50 லட்சம் ஆனதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 17 அன்று அவர் வீடு திரும்பினார்.
தான் தினமலர் சந்தாதாரர் என்பதை நினைவுகூர்ந்து, ஆண்டு சந்தா மூலம் கிடைக்கும் யுனைடெட் இன்சூரன்ஸ் காப்பீடு குறித்து தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். அலுவலகத்தின் வழிகாட்டுதலுடன் தேவையான ஆவணங்களை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினார்.
செப்டம்பர் 24 அன்று காப்பீட்டு அலுவலகம் கூடுதல் தகவல்களை கேட்டறிந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்பட்டது. மருத்துவமனை கட்டணத்திற்காக கடன் வாங்கிய நிலையில், இந்த தொகை நிதிச் சுமையை சமாளிக்க உதவியதாக அவர் தெரிவித்தார். இதை அறிந்த உறவினர்களும் ஆண்டு சந்தா பெற முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.





