ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற பிளைதுபாய் பயணிகள் விமானம், காக்பிட்டில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

FZ1073 என்ற விமானத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்ததாகவும், அதில் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பயணிகள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இரு விமானிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது; அது பின்னர் உடல் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது ஒரு விமானி பாக்கெட் கத்தியால் மற்றொரு விமானியை குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விமானம் கடத்தப்படுவதை குறிக்கும் வகையிலான ‘ஹைஜாக்’ அலாரம் சிக்னலும் அனுப்பப்பட்டதாக தகவல்.

பின்னர் நடந்த விசாரணையில், இது கடத்தல் முயற்சி அல்லது சட்டவிரோத ஆக்கிரமிப்பு அல்ல என்றும், விமானிகளுக்கிடையேயான மோதலால் ஏற்பட்ட சூழ்நிலையிலேயே அந்த அலாரம் எழுந்தது என்றும் உறுதி செய்யப்பட்டது. அலாரம் எழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.