காரைக்குடி: கூட்டணிக்குள் கம்யூனிஸ்ட் கட்சிகள் “கட்டுச்சோற்றில் பெருச்சாளி” போல இருப்பதாகவும், அதனால் முதல்வர் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் தனது பிறந்தநாள் நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் ஆட்சியின் முதல் 100 நாட்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்ததாகவும், “அரசே இல்லையோ” என்ற எண்ணம் மக்களுக்கு உருவாகிறது என்றும் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் மூன்று அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து செயல்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறிய ராஜா, தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறது எனவும் வலியுறுத்தினார். இதே பேட்டியில் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம் குறித்தும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.

இடைத்தேர்தலை குறிப்பிட்டு, இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சி தோற்றால் கம்யூனிஸ்ட், வி.சி.கே. போன்ற கட்சிகள் கூட்டணியில் தொடராது என அவர் கூறினார். ஒரு பக்கம் அரசை ஆதரிப்பதாக கூறி நன்மைகளை பெறுவதும், மற்றொரு பக்கம் வேட்பாளர்களை நிறுத்தி ஆட்சி நிரந்தரமற்றது என்ற எண்ணத்தை உருவாக்க முயல்வதும் நடக்கிறது என குற்றம்சாட்டினார்.

யாரை நம்பக் கூடாதோ அவர்களை நம்பினால் ஆட்சியின் போக்கு எப்படியாகும் என்று சொல்ல முடியாது என கூறி, முதல்வர் விஜய் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தினார்.