வீரமணி மீதான பாலியல் வன்முறை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற பொது நல மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்க மறுத்தது.

சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.)க்கு மாற்ற வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுதாரர்களான வழக்கறிஞர்கள் ராஜசேகரன் மற்றும் வாராகி, வீரமணியுடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உடனிருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாகவும், வழக்கு அரசியலாக்கப்படுவதால் சுயாதீன விசாரணை அமைப்பு தேவைப்படுவதாகவும் வாதிட்டனர்.

விசாரணை நடத்திய நீதிபதி லஷ்மி நாராயணன், எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் ஏன் உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கேள்வி எழுப்பினார். மனுதாரர்களிடம் உள்ள ஆதாரங்களை மறுநாள் பிற்பகல் 3 மணிக்குள் எஸ்.ஐ.டி. அதிகாரிகளிடம் வழங்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் அக்டோபர் 7 அன்று விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய எஸ்.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.