சென்னை: தமிழகத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களின் ஆகம அடையாளத்தை பாதிக்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வரும் ‘ஆகமக் கோவில் கணக்கெடுப்பு’ முறையில் கடுமையான குளறுபடிகள் உள்ளதாக ஆன்மிக அமைப்புகளும் வரலாற்று ஆய்வாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அறநிலையத்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட ஆகம வகைப்பாட்டு பட்டியலின்படி, ஆய்வு செய்யப்பட்ட 34,971 கோவில்களில் 27,510 (சுமார் 79%) கோவில்கள் ‘ஆகமம் பின்பற்றப்படாதவை’ என குறிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற தீர்ப்பின் நோக்கத்தின்படி, கோவிலின் கட்டமைப்பு மற்றும் மரபு அடிப்படையில் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை, தற்போதைய வழிபாட்டு நிலையை வைத்து முடிவு செய்வது சரியல்ல என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ஆலயம் காப்போம்’ அமைப்பின் இயக்குநர் விஜய் நாராயணன் கூறுகையில், ஆகம நடைமுறையைச் சார்ந்த முடிவுகளை கோவில் அறங்காவலர்கள் எடுக்க வேண்டும் என்றார். ஆனால், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத கோவில்களில் செயல் அலுவலர்கள் தக்காராக கூடுதல் பொறுப்பு வகித்து, தன்னிச்சையாக அறிக்கைகளில் கையொப்பமிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உதாரணமாக, தஞ்சை மாவட்டம் பரக்கலக்கோட்டையில் உள்ள மத்தியபுரிஸ்வரர் கோவில் ‘ஆகமமற்றது’ என்றும் ‘100 ஆண்டுக்கும் குறைந்த பழமையுடையது’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், அந்த கோவில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுத் தலம் என்றும், ஆகமப்படி கும்பாபிஷேகம் நடந்ததாக அக்கோவில் குருக்கள் சான்றளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தஞ்சை மற்றும் திருவாரூர் மண்டலங்களில் உள்ள சோழர், பாண்டியர் காலத்து பல பழமையான ஆகமக் கோவில்கள் ‘100 ஆண்டுகளுக்கும் குறைவானவை’ என்றும் ‘ஆகமமற்றவை’ என்றும் தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், அறநிலையத்துறை வெளியிட்ட பட்டியலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், வரலாற்று அறிஞர்கள், ஆகம நிபுணர்கள் மற்றும் அர்ச்சகர்களை இணைத்து நேர்மையான முறையில் மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.





