பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாதுவில் ரூ.16,745 கோடி மதிப்பில் அணை அமைக்க திட்டமிட்டு, இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், பின்னர் திருத்தப்பட்ட அறிக்கையும் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால் காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கும் நீர் பாதிக்கப்படும் என தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என். செலுவராயசாமி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
டில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்த சிவகுமார், மாநிலத்தின் நிலுவை நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து பேசியதுடன், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரிகள் குழு அணை அமையவுள்ள இடத்திற்கு ஏற்கனவே வந்து ஆய்வு செய்ததாகவும், கர்நாடக அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்ததாகவும் அவர் கூறினார்.
அணை திட்டம் பெங்களூரின் குடிநீர் தேவைக்காக மட்டுமே; பாசனத்திற்கு பயன்படுத்தப்படாது என்பதை மத்திய குழு புரிந்து கொண்டதாக சிவகுமார் கூறினார். தமிழக எல்லையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள இடத்தின் நிலவரத்தை அறிய தமிழக அரசும் ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்யலாம் என்றும், வந்தால் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் மத்திய குழு எப்போது ஆய்வு செய்தது என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.





