புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி வழக்கில், நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளராக கூறப்படும் சந்தீப் மிஸ்திரி ஐக்கிய அரபு எமீரேட்சில் (யுஏஇ) இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
₹14,357 கோடி அளவிலான பிஎன்பி மோசடி 2018-ல் வெளிச்சத்துக்கு வந்தது. இதில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்படும் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி வெளிநாடுகளுக்கு தப்பிய நிலையில், தொடர்புடையவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
விசாரணை அமைப்புகளின் தகவலின்படி, யுஏஇயில் உள்ள போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் வழியாக பணத்தை செலுத்துவதில் மிஸ்திரிக்கு பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் அவர்மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுடன், ரெட் கார்னர் நோட்டீசும் வெளியிடப்பட்டது.
யுஏஇயில் பதுங்கியிருந்த மிஸ்திரியை அந்நாட்டு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். திங்களன்று அவர் நாடு கடத்தப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பினர். அவரை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





