தலைமைத் தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. மேலும், அந்த மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது.
செய்தி விவரங்களின்படி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் “சிறப்பு தீவிர திருத்த” (SIR) பணியை CEC தலைமையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பீஹாரில் தொடங்கிய இந்தப் பணி தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முடிக்கப்பட்டதாகவும், இரட்டை பதிவு, இறந்தவர்கள், நிரந்தர முகவரி மாற்றம், போலி வாக்காளர்கள் போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் SIR பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், SIR பணியை CEC தன்னிச்சையாக செயல்படுத்தியதாகவும், மற்ற இரு தேர்தல் கமிஷனர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீஹாரைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மற்ற இரு கமிஷனர்களின் ஒப்புதல் இன்றியும் அவர்களின் எதிர்ப்புக்கு இடையேயும் CEC நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் கூட்டு முடிவெடுக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அமைப்பு என்பதால், இது அதிகார துஷ்பிரயோகம் என மனுவில் வாதிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்று, அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.





