தலைமை தேர்தல் கமிஷனர் (சிஇசி) ஞானேஷ் குமார் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இன்றி சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறி, அவற்றையும் மனு எதிர்க்கிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) உள்ளிட்ட விவகாரங்களில் சிஇசி எடுத்த முடிவுகள் குறித்து இரு தேர்தல் கமிஷனர்கள் கேபினட் செயலருக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றது. குறிப்பாக, படிவம்–6-ல் எஸ்.ஐ.ஆர். தொடர்பான சில தகவல்களை சேர்த்தது விதிமுறைகளுக்கு எதிரானது என அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், “அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை” என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவில், பல உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் கமிஷனில் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் என்றும், தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை சிஇசி அதிகாரங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கவும், அவரை பதவியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324(1)ன் கீழ் தேர்தலை நடத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் சிஇசி ஒருவருக்கே அல்ல; தேர்தல் கமிஷன் கூட்டு அமைப்புக்கே வழங்கப்பட்டுள்ளது என மனு வலியுறுத்துகிறது. சிஇசி தனிநபராக சட்டவிரோதமாக அதிகாரங்களை பயன்படுத்தினாரா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்து, அத்தகைய நடவடிக்கைகளை செல்லாதவை என அறிவிக்கவும், இடைக்காலத்தில் மற்ற இரு தேர்தல் கமிஷனர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பணிகள் நடைபெற உத்தரவிடவும் மனு கோருகிறது.

இதனிடையே, மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கம் செப்.24ல் தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில், வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அதிகாரிகள் (இ.ஆர்.ஓ.)க்கு கூடுதல் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ‘இ.சி.ஐ. நெட்’ மென்பொருள் மூலம் வரும் நோட்டீஸ்கள் தொடர்பாக உள்ளூர் அளவில் தீர்மானிக்க வசதியாக மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை தேர்தல் கமிஷன் ஏற்றதாக கூறப்படுகிறது.