புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு பயன்படும் அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தி விலைக்கும் அதிகபட்ச சில்லரை விலைக்கும் (எம்.ஆர்.பி.) இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளது. வழக்கறிஞர் கிஷன் சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனு விசாரணையில் இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, “எக்ஸ்ம்பிடியா 20 எம்ஜி” என்ற ஊசியை எடுத்துக்காட்டாகக் கூறியது. அதன் அடக்க விலை ரூ.3,520 ஆக இருக்க, அச்சிடப்பட்ட எம்.ஆர்.பி. ரூ.22,437 என இருப்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சாதாரண மருந்தகங்களில் சிறிய தள்ளுபடி கிடைக்கலாம்; ஆனால் கார்ப்பரேட் மருத்துவமனைகள் முழு எம்.ஆர்.பி.யையே நோயாளிகளிடம் வசூலிப்பதாகவும் குறிப்பிட்டது.

மேலும், கட்டணம் செலுத்தும் வரை உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மறுக்கும் நிலை போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக மக்கள் கடும் துன்பம் அனுபவிப்பதாக நீதிமன்றம் கவலை தெரிவித்தது. அத்தியாவசிய பட்டியலில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட (ஷெடியூல்டு) மருந்துகளுக்கு மட்டுமே விலை வரம்பு நிர்ணயிக்கப்படுவதாகவும், சந்தையில் 80%க்கும் அதிகமாக விற்பனையாகும் அட்டவணைப்படுத்தப்படாத (நான்-ஷெடியூல்டு) மருந்துகள் பெரும்பாலும் கட்டுப்பாடின்றி ஆண்டுக்கு சுமார் 10% விலை உயர்வுடன் விற்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியது.

இதற்கான தீர்வாக, சில்லரை விற்பனை விலைக்கு மேல் 16% லாப வரம்பை மட்டுமே சேர்த்து எம்.ஆர்.பி. நிர்ணயிக்க சட்டம் கொண்டு வரக் கூடாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்து மத்திய அரசு ஆய்ந்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 12க்கு ஒத்திவைத்தது.