தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைச் சுற்றிய விவகாரத்தில், தவெக மற்றும் காங்கிரஸ் இடையே வெளிப்படையான கருத்து மோதல் உருவாகியுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை முன்வைத்து, தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தமிழகத்தில் தவெக தரப்பில் இதுவரை போராட்டம் நடத்தப்படவில்லை; முதல்வர் விஜயும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதையடுத்து, திமுக துணை பொதுச்செயலாளர் ராஜா, விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னையில் பேட்டியளித்த தவெக அமைச்சர் ராஜ்மோகன், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டுமெனில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாயிலாக மொத்த சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும், “திசை திருப்பும் செயலுக்கு இரையாக மாட்டோம்” என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு, தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கடும் எதிர்வினை தெரிவித்தது. அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம், “வாயைத் திறந்து அறியாமையை வெளிப்படுத்துவதை விட, சில சமயங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது” என அறிக்கையில் கூறினார். பின்னர் தவெக நிர்வாகிகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் நடைமுறையில் சீர்திருத்தம் வேண்டும் என்றாலும், தலைமை தேர்தல் கமிஷனரை குறிவைத்து நடத்தப்படும் போராட்டங்களில் உடன்பாடு இல்லை என்றும், வாக்காளர் உரிமையை பாதுகாக்கும் பிரச்னை அடிப்படையிலான தீர்வுகளே தங்களின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தனர்.





