பாக்தாத்: இருபது ஆண்டுகளுக்கு அருகில் ஈராக் நாட்டில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற உள்ள நிலையில், அண்டை நாடான ஈரான் இதை வரவேற்கும் சூழலில் ஈராக் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன.
அணு, ரசாயன ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை ரகசியமாக தயாரிப்பதாக கூறி 2003ல் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசைன் 2006ல் தூக்கிலிடப்பட்டார். போர் முடிந்த பின்னரும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அமெரிக்கப் படைகள் அங்கே தொடர்ந்தன.
அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான முந்தைய நிர்வாக காலத்தில், ஈராக் இருந்து படிப்படியாக படைகள் வெளியேறும் என அறிவிக்கப்பட்டது. அந்த நடைமுறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முழுமையான வெளியேற்றம் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெளியேற்றம் மேற்காசிய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கலாம் என பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஈரானும் அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் இதை பெரிய வெற்றியாகக் கொண்டாடுகின்றன. அல் அசாத் விமானப்படை தளம் போன்ற முக்கிய தளங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகுவதால், ஈராக் மீது ஈரானின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு செல்வாக்கு மேலும் விரிவடையலாம் எனவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பாதுகாப்பு வெற்றிடம் உருவாகி ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தலையெடுக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வடக்கிலுள்ள குர்திஷ் தன்னாட்சி பகுதிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் உள்ளது. இதனால், ஈராக் அரசு பல்வேறு தலையீடுகளை சமாளித்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது.





