தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை தனி விமானத்தில் கோவைக்கு வந்து இறங்கினார். பின்னர் அவர் சாலை வழியாக தாராபுரம் நோக்கி புறப்பட்டார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, செப்.30 மதியம் 3 மணிக்கு அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் சித்தராவுத்தன்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, ‘க்யூஆர்’ குறியீடு கொண்ட அனுமதியுடன் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பிரசார திடலில் கட்சியினர் அதிக எண்ணிக்கையில் திரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் இறங்கிய முதல்வர் விஜய்க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசார நிகழ்ச்சியை முடித்த பின்னர் இன்று இரவு சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.