சென்னை: தமிழக மக்கள் கதர் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை ஆதரிக்க வேண்டும் என முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது கைத்திறன், உழைப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தியைப் போற்றும் செயல் என அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், அந்த நாள் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறையும் எளிமை, சுயநம்பிக்கை, உழைப்புக்கு மதிப்பு, அனைவரையும் அரவணைக்கும் மனிதநேயத்தையும் நினைவுகூரும் நாளாக இருப்பதாக கூறினார். அகிம்சை வழியில் காந்தியடிகள் இராட்டை மூலம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பொருளாதார சுதந்திரம் மற்றும் சுயசார்பை போதித்ததாகவும் குறிப்பிட்டார்.
ஒரு கதராடையை வாங்குவது ஒரு நெசவாளரின் கைத்திறனுக்கு அளிக்கும் அங்கீகாரம் என்றும், கிராமப் பொருட்களை வாங்குவது கைவினைஞரின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை என்றும் முதல்வர் கூறினார். உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவது நமது மண்ணின் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் இயற்கை இழையால் ஆன சுற்றுச்சூழல் நேயமிக்க ஆடைகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருவதாகவும், இதற்கேற்ப தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைத்து புதிய வடிவமைப்புகள் மற்றும் மின்னணு வணிகத் தளங்கள் வழியாக அணுகலை மேம்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகமெங்கும் உள்ள கதரங்காடிகள் மூலம் கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்கள் ஆண்டு முழுவதும் 30 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படுவதாக தெரிவித்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கதர் ஆடைகள் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி நூற்பாளர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.




