புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிய வாக்காளர்களை சேர்க்க பயன்படும் படிவம் 6 தொடர்பான விதிகளில் தேர்தல் கமிஷன் தளர்வு வழங்கியுள்ளது.
இதன்படி, படிவம் 6-ல் விண்ணப்பிக்கும் போது, பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியின் முந்தைய வாக்காளர் பட்டியல் விபரங்களை குறிப்பிட வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆன்லைன் அல்லது நேரில் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஐ.ஆர். நடந்த போது, பூர்வீக தொடர்பை நிரூபிக்க கூடுதல் உறுதிமொழி படிவத்தில் குடும்ப விபரங்களை கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
இப்போது, எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுமையாக முடிவடைந்த 20 மாநிலங்களில், பழைய நடைமுறையின்படி குடும்ப விபரங்கள் இல்லாமலேயே படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதே நேரம், எஸ்.ஐ.ஆர். நடைபெறும் மாநிலங்களில், விண்ணப்பிப்போர் கூடுதல் உறுதிமொழி படிவத்தை தொடர்ந்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், மஹாராஷ்டிராவில் எஸ்.ஐ.ஆர். நடைபெறும் நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கம், ‘இ.சி.ஐ. நெட்’ மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ்களுக்கு பதிலாக பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும், ஆவண நம்பகத்தன்மை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீடு சென்று சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.





