புதுடில்லி: துபாய்–டெல் அவிவ் விமானப் பயணத்தின் போது நடந்த பரபரப்பான சம்பவத்தில் துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாருக்கு குஜராத் மாநில அரசு உயரிய விருதை அறிவித்துள்ளது.
விமானத்தில் 174 பேர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், துணை விமானி கத்தியால் குத்தியதால் மச்சார் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயங்களைப் பொருட்படுத்தாமல் அவர் எதிர்த்து போராடி விமானியின் அறைக்கதவைத் திறந்ததால், பயணிகளும் விமானப் பணியாளர்களும் தலையிட்டு தாக்குதல் நடத்தியவரை அடக்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து விமானம் திசைமாற்றப்பட்டு சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் நடுவானில் ஏற்படக்கூடிய பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை பல்வேறு சர்வதேச ஊடகங்கள் விரிவாக செய்தியாக வெளியிட்டு, மச்சாரை ‘நாயகன்’ எனப் பாராட்டியுள்ளன.
இந்நிலையில், குஜராத் பூர்வீகத்தைக் கொண்ட கேப்டன் சுமித் மச்சாரின் சமயோசித புத்தியும் அசாதாரண வீரமும் கௌரவிக்கப்படும் வகையில், ‘விசிஷ்ட குஜராத் கரிமா’ விருதை வழங்க உள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.





